முருகன்

அருள்மிகு வயலூர் முருகன்:

மூவிரண்டு முகத்தானை முத்துக்குமாரனைகூவி அழைத்தாலே குருவாய் வருவானே காவிரிக் கரையமர்ந்த வயலூர் முருகனைசேவித்து நின்றாலே செல்வமெல்லாம் தருவானே மூவிழி முதல்வன் மைந்தனை தூமலர்தூவியே தொழுதாலே துணையாக நிற்பானேஆவினன்குடி வாழும் அழகு சுந்தரனைநாவினால் பாடினால் நல்லருள் புரிவானே

முருகன்

அருள்மிகு முருகன்:

இன்னும் என்ன செய்வதோ ஈசன் திருமகனேஉன்னருளைப் பெறவே உன்னைப் பணிவதன்றி பன்னிரு ராசியிலே பக்தர் சிக்கி தவிக்கையிலேபன்னிரு விழியிருந்தும் பாராதிருப்பதென்ன முன்னம் செய்த வினை விலக முருகா என்றேனேசன்னதி வந்துன்னை சேவித்து நின்றேனேஇன்னமும் தாமதமேன் ஈராறு கரத்தோனேஇன்னருள் புரிவாயே ஈடில்லா சுந்தரனே

முருகன்

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி, திருப்பரங்குன்றம்:

சரவணபவனே சண்முகசுந்தரனேவரமருள்வாயே வீரவிசாகனே அரவணிந்தாடும் அரனின் திருமகனேஅரவுமீதாடிய அரியின் மருமகனே மரமாகி நின்ற சூரனைப் பிளந்துசுரபதி மகளின் கரந்தனை பிடித்தபரங்கிரி அமர்ந்த பார்வதி மைந்தனேபரவசமுடனே பாடிஉனைப் பணிந்தேனே

முருகன்

அருள்மிகு கனகவேல் கந்தன்:

கனகசபாபதி கனல்விழி தனில் வந்தகனகவேல் கந்தாஉன் கழலினையே துணை மனதுக்கினிய உன்னை மனதாலும் வாக்காலும்மனமுருகி பணிந்தேனே மனமிரங்கி அருள்வாயே சினமுடன் சூரனை சிதைத்த சண்முகனேதனமுடன் கல்வியும் தந்திடும் சுந்தரனேஉனது பணி இந்த உலகினை காப்பதுவேஎனது பணி உனக்கு பணிசெய்து கிடப்பதுவே

முருகன்

அருள்மிகு சிங்காரவேலர், திருமயிலை:

மயிலாகவே வந்து மலைமகள் பூசித்தமயிலையம்பதி வாழும் மயில்வாகனனே கயிலை நாதன் கண்ணிலே தோன்றியசுந்தர பாலனே சிங்காரவேலனே ஆனைக்கருள்செய்த அனந்தன் மருகனேஆனைத்தோலணிந்த அரனின் மைந்தனேஆனை வளர்த்த அணங்கின் மணாளனேஆனைமுகன் அருளாலே மானை மணந்தவனே

முருகன்

அருள்மிகு கந்தையன்:

என்று எனக்கு அருள்வாயோ எந்தையே கந்தையாகன்று என காத்திருந்தேன் கனிந்தருள் சுரப்பாயே அன்றாடம் உன்நாமம் ஆயிரம் உரைத்தேனேஒன்றேனும் உன்செவியில் ஒலிக்கவும் இல்லையோ குன்றெலாம் ஏறிவந்து குமரா உனைக்கண்டுமன்றாடி நின்றுமே மனமும் இரங்கலையோமன்றாடி சுந்தரன் மைந்தனே முருகைய்யாஇன்றேனும் எந்தனுக்கு இன்னருள் புரிவாயே

முருகன்

அருள்மிகு செங்கதிர் வேலன்:

செய்வதொன்று அறிவேனே செங்கதிர் வேலனேமெய்யன்புடனே உன் மலரடி தொழுவதே உய்வதற்கு உனையன்றி உறுதுணை எவரைய்யாஐயமும் ஏதைய்யா ஆறுமுக வேலைய்யா பால் வண்ணன் பாலனே பன்னிரு கையோனேமாலவன் மருகனே மந்திரப் பொருளோனேவேலுடன் மயிலேறி வலம்வந்த சுந்தரனேகோலுடன் மலையேறி காட்சிதரும் கந்தனே

முருகன்

அருள்மிகு கந்தபெருமான்:

காத்திருக்க வைப்பதேனோ கந்தபெருமானேகாத்தருள் புரியவே காலமும் கரையுதே தோத்திரம் அறியாமல் தொழுது நின்றேனேபாத்திரம் பார்க்காமல் பரிந்தருள்வாயே திருப்பரங்கிரிதனை வலமும் வந்தேனேதிருச்சீரலைவாயில் நீராடிப் பணிந்தேனேதிருவாவினன்குடியில் காவடி சுமந்தேனேதிருத்தணி மலையினிலே படிபூசை செய்தேனே சுவாமிமலை மீதுறையும் சுவாமிநாதனேசோலைமலை மேவிய சுந்தரனே குகனேஆறுமுக வேலவனே ஆதிசிவன் பாலகனேவீறுகொண்ட முருகனே விரைந்தருள் புரிவாயே

முருகன்

அருள்மிகு கண்டி கதிர்வேலன்:

கண்டி கதிர்வேலனே கார்த்திகை பாலனேகண்விழிப் பார்வையிலே காத்தருள் புரிபவனே அண்ணாமலையினிலே அருணகிரிநாதருக்குபண்ணோடு உன்புகழ்பாட பரிந்தருள் புரிந்தவனே வண்ணமயில் ஏறிவந்து விண்ணவரை மீட்டஅண்ணலே அழகனே ஆறுபடை அமர்ந்தவனேபண்டிதர் பாமரர் போற்றிடும் சுந்தரனேஎண்ணியதெல்லாம் தரும் எந்தாயுமானவனே

முருகன்

அருள்மிகு செந்தூர் வேலவன்:

தாமதம் செய்வதேனடி தோழி எனக்குதயைபுரிய இன்னும் தணிகை வேலனவன் சாமத்திலே விழித்து சஷ்டி நோன்பிருந்துசங்கரன் மைந்தனை சதா நினைத்துமே அறுபடை வீடும் சென்று வந்தேனடிகாவடி பலவும் கொண்டு சென்றேனடிவேண்டுதல் யாவும் வேண்டி நின்றாலுமேசெந்தூர் தனில் வாழும் சுந்தர வேலனவன்